Skip to main content
Source
Tamil oneindia
https://tamil.oneindia.com/news/delhi/which-political-party-received-the-most-donations-in-2022-23-ater-bjp-571597.html?story=2
Author
Vigneshkumar
Date

டெல்லி: ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகள் படி பாஜகவுக்கு சுமார் ரூ.250 கோடி தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் நன்கொடை கிடைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் அமைப்புகளில் சீர்திருத்தம் தேவை என்பதை ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் என்ற அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இதற்காக இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை குறித்த விவரங்களை ஆய்வு செய்து வெளியிடும்.

அதன்படி இந்தாண்டிற்கான நன்கொடை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2022-23 நிதியாண்டில் தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் பெறப்பட்ட நன்கொடைகளில் சுமார் 70 சதவீதத்திற்கும் மேல் பாஜகவுக்கே சென்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

நன்கொடை: பாஜகவுக்கு அடுத்து தெலுங்கானாவில் முன்பு ஆளும் கட்சியாக இருந்த கேசிஆரின் பிஆர்எஸ் கட்சி தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் பெற்ற நிதியில் சுமார் 25 சதவீதத்தை நன்கொடைகளாகப் பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.

2022-23 நிதியாண்டில் தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் ரூ. 363 கோடிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் 39 கார்ப்பரேட் மற்றும் வணிக நிறுவனங்கள் இணைந்து இந்த நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளன. முன்பே கூறியது போல அதில் பெரும் பகுதி பாஜகவுக்கே சென்றுள்ளதாக ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

எலெக்டோரல் டிரஸ்டு: இதில் ப்ரூடென்ட் எலெக்டோரல் டிரஸ்டு என்ற அமைப்பிற்குத் தான் அதிகபட்ச நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 34 கார்ப்பரேட் மற்றும் வணிக நிறுவனங்கள் ப்ரூடென்ட் எலெக்டோரல் டிரஸ்டுக்கு ₹ 360 கோடி நன்கொடை வழங்கியுள்ளன. அதேபோல சமாஜ் எலெக்டோரல் டிரஸ்டுக்கு ஒரே ஒரு நிறுவனம் நிறுவனம் ரூ. 2 கோடி நன்கொடை கொடுத்துள்ளது. பரிபார்டன் எலெக்டோரல் டிரஸ்டுக்கு இரண்டு நிறுவனங்கள் ₹ 75.50 லட்சமும், டிரையம்ப் எலெக்டோரல் டிரஸ்டுக்கு இரண்டு நிறுவனங்கள் ₹ 50 லட்சமும் நன்கொடையாக அளித்தன

பெரு நிறுவனங்கள் இதுபோன்ற எலெக்டோரல் டிரஸ்டு அமைப்பிற்கு நிதி வழங்கும்... அந்த எலெக்டோரல் டிரஸ்டு அமைப்பு தான் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படித் தேர்தல் அறக்கட்டளைகளில் பெறப்பட்ட நிதியில் சுமார் 70%, அதாவது ₹ 259.08 கோடி பாஜகவுக்குச் சென்றுள்ளது.

அடுத்த சுமார் 25.5% அதாவது 90 கோடி ரூபாய் நிதி தெலுங்கானாவில் ஆளும் கட்சியாக இருந்த பிஆர்எஸ் இருந்துள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து மொத்தம் ₹ 17.40 கோடியை நிதி பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

குறைவு: கடந்த 2021-22நிதியாண்டில் பாஜகவுக்கு ₹ 336.50 கோடி இந்த ப்ரூடென்ட் எலெக்டோரல் டிரஸ்ட்மூலம் நன்கொடையாகக் கிடைத்துள்ளது. அத்துடன் ஒப்பிடும் போது இந்தாண்டு சுமார் 70 கோடி ரூபாய் நன்கொடை குறைந்துள்ளது. இந்தாண்டு பாஜகவுக்கு ப்ரூடென்ட் எலெக்டோரல் டிரஸ்ட் மூலம் 256 கோடி ரூபாய் மட்டுமே நன்கொடையாகக் கிடைத்துள்ளது. இது தவிர பிஆர்எஸ், ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கும் ப்ரூடென்ட் எலெக்டோரல் டிரஸ்ட் மூலம் நன்கொடை கிடைத்துள்ளது.

அதே நேரம் சமாஜ் இடி அசோசியேஷன் என்ற அமைப்பு 2022-23 நிதியாண்டில் தனக்குக் கிடைத்த நிதியில் ₹ 1.50 கோடியை பாஜகவுக்கு நன்கொடையாக வழங்கியதாக ஏடிஆர் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த சமாஜ் இடி அசோசியேஷன் அமைப்பு காங்கிரஸ் கட்சிக்கு 50 லட்ச ரூபாய் நன்கொடை அளித்துள்ளது.