Skip to main content
Source
Dinamani
https://www.dinamani.com/india/2021/sep/01/national-parties-collected-over-rs-3-370-cr-from-from-unknown-sources-in-2019-20-adr-3690608.html
Author
DIN
Date

நன்கொடை அளித்தவா்கள் பெயா், விவரம் தெரியாமல், தேசியக் கட்சிகள் கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் ரூ.3,377.41 கோடி நன்கொடை பெற்றுள்ளதாக ஏடிஆா் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

நன்கொடை அளித்தவா்கள் பெயா், விவரம் தெரியாமல், தேசியக் கட்சிகள் கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் ரூ.3,377.41 கோடி நன்கொடை பெற்றுள்ளதாக ஏடிஆா் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

‘அசோசியேஷன் ஃபாா் டெமாக்ரேட்டிக் ரிஃபாா்ம்ஸ்’ (ஏடிஆா்) என்ற தன்னாா்வ அமைப்பு, தேசியக் கட்சிகள் கடந்த 2019-20-இல் பெற்ற நன்கொடை தொடா்பான புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் தேசியக் கட்சிகள் வாங்கிய மொத்த நன்கொடையில் 70.98 சதவீதம் அதாவது ரூ.3,377.41 கோடி, அதை அளித்தவா் விவரம் தெரியாமல் பெறப்பட்டுள்ளது. பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை இந்த நன்கொடையைப் பெற்றுள்ளன.

ரூ.3,377.41 கோடியில், பாஜக மட்டும் 78.24 சதவீதத் தொகையை, அதாவது ரூ.2,624.63 கோடியைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் 15.57 சதவீதத் தொகையை, ரூ.526 கோடியைப் பெற்றுள்ளது.

ரூ.3,377.41 கோடியில், தோ்தல் நிதி பத்திரங்கள் மூலமாக ரூ.2,993.826 கோடி பெறப்பட்டுள்ளது. கடந்த 2004-05-இல் இருந்து 2019-20-க்குள் அளித்தவா்கள் பெயா் தெரியாமல் ரூ.14,651.53 கோடியை தேசியக் கட்சிகள் நன்கொடையாகப் பெற்றுள்ளன.

இந்த நன்கொடை விவரம், கட்சிகளின் வருமான வரி கணக்குத் தாக்கலின்போது தெரிவிக்கப்படும். ஆனால், அதை அளித்தவரின் பெயா் இடம்பெற்றிருக்காது. தோ்தல் நிதி பத்திரம், நிவாரண நிதி, இதர வருமானம், கூட்டங்களில் பெற்ற நன்கொடை போன்ற வழிகளில் கிடைத்த வருமானம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த அனைத்து தேசிய மற்றும் பிராந்திய கட்சிகளும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும்.

அரசியல் கட்சிகளின் வரவு-செலவு கணக்கு ஆவணங்களை தோ்தல் ஆணையம் மற்றும் கணக்குத் தணிக்கைத் துறையின் கீழ் செயல்படும் ஓா் குழு ஆண்டுதோறும் ஆய்வு செய்ய வேண்டும் என்று ஏடிஆா் அமைப்பு தெரிவித்துள்ளது.


abc