Skip to main content
Source
Vikatan
https://www.vikatan.com/government-and-politics/politics/44-of-sitting-mlas-face-criminal-charges-adr-report-cites-poll-affidavits
Author
சி. அர்ச்சுணன்
Date

இந்தியாவில் 1,777 எம்.எல்.ஏ-க்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

இந்தியாவில் தற்போது பதவியிலிருக்கும் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களில் 44 சதவிகிதம் பேர்மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் (Association for Democratic Reforms) நேற்று மாலை ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. தேசிய தேர்தல் கண்காணிப்பகம் மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் மேற்கொண்ட இந்த ஆய்வுக்கான தரவுகள் அனைத்தும், தற்போது பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ-க்கள் தேர்தலின்போது தாக்கல் செய்த பிராமண பாத்திரங்களின் மூலம் எடுக்கப்பட்டதகக் கூறப்படுகிறது. அதன்படி மொத்தமாக 28 மாநில சட்டசபைகள், இரண்டு யூனியன் பிரதேசங்களில் பதவியிலிருக்கும் 4,033 எம்.எல்.ஏ-க்களில் 4,001 எம்.எல்.ஏ-க்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த ஆய்வின் முடிவில் 4,001 எம்.எல்.ஏ-க்களில் 1,777 எம்.எல்.ஏ-க்கள்மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் அதிகபட்சமாக பா.ஜ.க-வைச் சேர்ந்த 479 எம்.எல்.ஏ-க்கள் கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்கின்றனர். அதற்கடுத்தபடியாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 334 பேரும், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 99 பேரும் இருக்கின்றனர். கடுமையான கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்பவர்களின் பட்டியலில், பா.ஜ.க-வைச் சேர்ந்த 337 எம்.எல்.ஏ-க்களும், காங்கிரஸைச் சேர்ந்த 194 எம்.எல்.ஏ-க்களும், திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த 77 எம்.எல்.ஏ-க்களும் இருக்கின்றனர்.

மாநில அளவில் சதவிகித வாரியாக எடுத்துக்கொண்டால், கேரளாவில் 135 எம்.எல்.ஏ-க்களில் 95 எம்.எல்.ஏ-க்கள் (70 சதவிகிதம்), பீகாரில் 242 எம்.எல்.ஏ-க்களில் 161 எம்.எல்.ஏ-க்கள் (67 சதவிகிதம்), டெல்லியில் 70 எம்.எல்.ஏ-க்களில் 44 எம்.எல்.ஏ-க்கள் (63 சதவிகிதம்), மகாராஷ்டிராவில் 284 எம்.எல்.ஏ-க்களில் 175 எம்.எல்.ஏ-க்கள் (62 சதவிகிதம்), தெலங்கானாவில் 118 எம்.எல்.ஏ-க்களில் 72 எம்.எல்.ஏ-க்கள் (61 சதவிகிதம்), தமிழ்நாட்டில் 224 எம்.எல்.ஏ-க்களில் 134 எம்.எல்.ஏ-க்கள் (60 சதவிகிதம்) மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன.

அதேசமயம் 114 எம்.எல்.ஏ-க்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்கொள்வதாகவும், அதில் 14 எம்.எல்.ஏ-க்கள் கற்பழிப்பு தொடர்பான வழக்குகளை (ஐபிசி பிரிவு 376) எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னொருபக்கம் எம்.எல்.ஏ-க்களின் சராசரி சொத்துமதிப்பு ரூ.13.63 கோடி எனவும், அதில் கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்ளும் எம்.எல்.ஏ-க்களின் சராசரி சொத்துமதிப்பு ரூ.16.36 கோடி எனவும், கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்ளாத எம்.எல்.ஏ-க்களின் சராசரி சொத்துமதிப்பு ரூ.11.45 கோடி எனவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


abc