Skip to main content
Source
Dinamani
https://www.dinamani.com/india/2024/Feb/28/national-parties-declare-income-of-rs-3077-cr-in-2022-23-bjp-has-highest-share
Author
DIN
Date

கட்சிகளின் வருமான அறிக்கை: பாஜக முன்னிலை, காங்கிரஸின் செலவு அதிகம்

தேசியக் கட்சிகள் ஆண்டுதோறும் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கும் வருவாய், செலவினங்கள் குறித்த விவரங்களை ஆய்வு செய்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு என்கிற தனியார் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி 2022-23 ஆண்டில் 6 தேசிய கட்சிகளின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.3077 கோடியாக உள்ளது.

ஆளும் பாரதிய ஜனதா கட்சி, இந்தாண்டு மட்டும் ரூ.2361 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஆறு கட்சிகளின் கூட்டுத்தொகையில் இது 76.73 சதவிகிதம் என அறிக்கை தெரிவிக்கிறது.

இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் ரூ.452.375 கோடி வருவாய் உடன் இடம்பெற்றுள்ளது. அதற்கடுத்த இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி, தேசிய மக்கள் கட்சி (என்பிபி) மற்றும் சிபிஐ-எம் ஆகியவை உள்ளன.

பாஜகவின் வருவாய் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 23.15 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதே போல தேசிய மக்கள் கட்சியின் வருவாயும் அதிகரித்துள்ளது.

காங்கிரஸ், சிபிஐ-எம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் முறையே 16.42 சதவிகிதம், 12.68 சதவிகிதம் மற்றும் 33.14 சதவிகிதம் அளவுக்கு வருவாய் குறைவைச் சந்தித்துள்ளன.

பாரதிய ஜனதா கட்சி மொத்த வருவாயில் 57.68 சதவிகிதம் மட்டுமே செலவிட்டுள்ளது.

அதே வேளையில், காங்கிரஸ் ரூ.452.375 கோடி வருவாய் ஈட்டிய நிலையில் செலவினங்கள் ரூ.467.135 கோடி அளவுக்கு மேற்கொண்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மொத்த வருவாய் ரூ.141.661 கோடி. அதில் ரூ.106.067 கோடி, அதாவது 74.87 சதவிகிதத்தைச் செலவிட்டுள்ளது.

ஆம் ஆத்மியின் வருவாய் ரூ.85.17 கோடியாக இருந்த நிலையில் கட்சியின் செலவு ரூ.102.051 கோடியாக உள்ளதாக கூட்டமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது.