2021-22 -ம் நிதியாண்டில் 89 கார்ப்பரேட்/வணிக நிறுவனங்கள், 40 தனிநபர்கள் மொத்தமாக ரூ.487.0551 கோடியை ஆறு தேர்தல் அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக அளித்திருக்கின்றன.
2021-22-ம் நிதியாண்டில் தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த அறிக்கையை ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms) வெளியிட்டிருக்கிறது. அதன்படி இந்த நிதியாண்டில் 89 கார்ப்பரேட்/வணிக நிறுவனங்கள், 40 தனிநபர்கள் மொத்தமாக ரூ.487.0551 கோடியை ஆறு தேர்தல் அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக அளித்திருக்கிறார்கள். இதிலிருந்து ரூ.487.0551 கோடி பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் தொகையில் அதிகபட்சமாக, ரூ.351.5 கோடியை பா.ஜ.க மட்டுமே நன்கொடையாகப் பெற்றிருக்கிறது. இது மொத்த அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்பட்ட நன்கொடைகளில் 72.17 சதவிகிதம். பா.ஜ.க-வுக்கு அடுத்தபடியாக பாரத ராஷ்டிர சமிதி ரூ.40 கோடியைப் பெற்றிருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில், சமாஜ்வாடி ரூ.27 கோடியும், ஆம் ஆத்மி ரூ.21.12 கோடியும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ரூ.20 கோடியும் பெற்றிருக்கின்றன. இந்தக் கட்சிகள் பெற்ற நன்கொடையைவிடவும் குறைவாக காங்கிரஸ் ரூ.18.44 கோடியை மட்டுமே பெற்றிருக்கிறது.
மேலும், இந்த வரிசையில், ஷிரோமணி அகாலி தளம் ரூ.7 கோடி, பஞ்சாப் லோக் காங்கிரஸ் ரூ.1 கோடி, கோவா ஃபார்வர்டு கட்சி, தி.மு.க தலா ரூ.50 லட்சங்களை நன்கொடையாகப் பெற்றிருக்கின்றன. இருப்பினும், இந்தத் தேர்தல் அறக்கட்டளைகளுக்கு நன்கொடை வழங்கியவர்களின் விவரங்கள் எதுவும் தெரிவில்லை. இது குறித்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், ``அறக்கட்டளைகளுக்கு நன்கொடைகள் என்பது வரி விலக்கு பெறுவதற்கான வழிமுறையா அல்லது பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்கான வழியா என்ற ஊகங்களுக்கு வழிவகுக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறது.