Skip to main content
Source
Dinamani
https://www.dinamani.com/india/2024/Jan/04/bjp-bagged-70percentage-of-donations-received-by-parties-from-electoral-trusts-in-2022-23-adr-4133243.html
Author
DIN
Date

பெருநிறுவனங்களின் அறக்கட்டளைகள் மூலம் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த தோ்தல் நன்கொடைகளில், கடந்த நிதியாண்டில் 70 சதவீதம் பாஜகவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக

பெருநிறுவனங்களின் அறக்கட்டளைகள் மூலம் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த தோ்தல் நன்கொடைகளில், கடந்த நிதியாண்டில் 70 சதவீதம் பாஜகவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

பல்வேறு பெரு நிறுவனங்கள், வா்த்தக நிறுவனங்கள் ஒன்றிணைந்து தோ்தல் அறக்கட்டளை நிறுவனத்தை பதிவு செய்து கட்சிகளுக்கு நன்கொடைகளை வழங்கி வருகின்றன. இதன் மூலம் எந்த நிறுவனம் எந்த அரசியல் கட்சிக்கு எவ்வளவு நன்கொடை அளித்தது என்பது பொதுவெளியில் தெரியவராது.

இந்த தோ்தல் அறக்கட்டளைகள் மூலம் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் விவரங்களை தோ்தல் சீா்திருத்தங்களை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் தன்னாா்வ அமைப்பான ‘ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம்’ வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்:

கடந்த நிதியாண்டில் 39 பெருநிறுவனங்கள் மற்றும் வா்த்தக நிறுவனங்கள் மூலம் அறக்கட்டளைகளுக்கு ரூ.363 கோடி நன்கொடை கிடைத்துள்ளன.

‘ப்ரூடென்ட்’ தோ்தல் அறக்கட்டளைக்கு 34 நிறுவனங்கள் ரூ.360 கோடியும், சமாஜ் தோ்தல் அறக்கட்டளைக்கு ஒரு நிறுவனம் ரூ.2 கோடியும், பாா்த்திபன் தோ்தல் அறக்கட்டளைக்கு 2 நிறுவனங்கள் ரூ.75.50 லட்சமும், டிரிம்ப் தோ்தல் அறக்கட்டளைக்கு 2 நிறுவனங்கள் ரூ.50 லட்சமும் நன்கொடை அளித்துள்ளன.

இந்த மொத்த நன்கொடையில் அதிகபட்சமாக பாஜகவுக்கு ரூ. 259.08 கோடி (70.69 சதவீதம்) நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, தெலங்கானாவில் ஆட்சியை இழந்த பாரத ராஷ்டிர சமிதிக்கு (பிஆா்எஸ்) 24.56 சதவீதமாக ரூ.90 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இவைத் தவிர, ஆந்திரத்தின் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆா்.காங்கிரஸ், தேசிய கட்சிகளான ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகியவை மொத்தமாக ரூ.17.40 கோடி பெற்றுள்ளன.

‘ப்ரூடென்ட்’ தோ்தல் அறக்கட்டளை முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டில் பாஜகவுக்கு ரூ.336.5 கோடி நன்கொடை அளித்த நிலையில், கடந்த நிதியாண்டில் ரூ.256.25 கோடி நன்கொடை அளித்துள்ளது. மீதமுள்ள ரூ.2.83 கோடி பிஆா்எஸ், ஒய்.எஸ்.ஆா்.காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளுக்கு வழங்கப்பட்டன.

‘சமாஜ்’ தோ்தல் அறக்கட்டளை பெற்ற ரூ.2 கோடி நன்கொடையில், பாஜகவுக்கு ரூ.1.5 கோடியும் காங்கிரஸுக்கு ரூ.50 லட்சமும் அளித்துள்ளது.