Source: 
Tamil.oneindia
https://tamil.oneindia.com/news/delhi/adr-report-says-national-parties-collected-15-077-crore-from-unknown-sources-between-fy-2004-05-472772.html
Author: 
Vigneshkumar
Date: 
27.08.2022
City: 
Delhi

பதிவு செய்யப்பட்ட தேசிய கட்சிகள் தாக்கல் செய்த வருமான வரி, நன்கொடை ஆகியவை குறித்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் புதிய ஆய்வு அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

இந்தியாவில் இருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் பல்வேறு தரப்பில் இருந்தும் நன்கொடை கிடைக்கும். எப்போதும் தேர்தல் நேரத்தில் நன்கொடை அதிகமாகவும் மற்ற காலத்தில் குறைந்தும் இருக்கும்.

அனைத்து அரசியல் கட்சிகளும் நன்கொடைகள் குறித்த விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். நாட்டில் இருக்கும் தேசிய கட்சிகள் மாநிலக் கட்சிகள் என இரண்டிற்கும் இது பொதுவான விதி!

ஜனநாயக சீர்திருத்தச் சங்கம்

அதன்படி பல்வேறு தேசிய கட்சிகளும் 2020-21 காலகட்டத்தில் பெற்ற நன்கொடை குறித்த தரவுகளைத் தேர்தல் ஆணையத்தில் பகிர்ந்து உள்ளனர். இந்த தரவுகளைப் பகுப்பாய்வு செய்துள்ள ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் என்ற அமைப்பு இது தொடர்பாக சில முக்கிய தரவுகளைப் பகிர்ந்துள்ளன. அதன்படி கடந்த 2004-05 முதல் 2020-21 வரையிலான இடைப்பட்ட காலத்தில் மட்டும் தேசிய கட்சிகளுக்கு அடையாளம் தெரியாத தரப்பினரின் மூலம் ₹15,077.97 கோடிக்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளது.

கட்சிகள்

கடந்த 2020-21ஆம் ஆண்டில் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுக்கு சுமார் ₹ 690.67 கோடி இப்படி அடையாளம் தெரியாத தரப்பினரிடம் இருந்து நன்கொடை கிடைத்துள்ளது. மொத்தம் 8 தேசிய கட்சிகள், 27 மாநிலக் கட்சிகள் பெற்ற நன்கொடை குறித்த தரவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. காங்கிரஸ், பாஜக, சிபிஎம், சிபிஐ, அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் பெற்ற நன்கொடை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

பட்டியல்

அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த வருமான வரி கணக்கு மற்றும் நன்கொடை அறிக்கைகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி 2004-05 நிதியாண்டு முதல் 2020-21 வரை தேசிய கட்சிகளுக்கு ₹15,077.97 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதேநேரம் இது எந்த தரப்பினரிடம் இருந்து வந்தது என்பது குறித்த தரவுகள் எதுவும் இல்லை.

பிராந்திய கட்சிகள்

அதேபோல 2020-21 நிதியாண்டில், 8 தேசிய அரசியல் கட்சிகளுக்கு ₹426.74 கோடி நன்கொடையாக வந்துள்ளது. அதேபோல 27 பிராந்தியக் கட்சிகளுக்கு ₹263.928 கோடி அடையாளம் தெரியாத தரப்பினரிடம் இருந்து நன்கொடையாக வந்துள்ளது.

காங்கிரஸ் முதலிடம்

அதிகபட்சமாகக் காங்கிரஸ் கட்சிக்கு 2020-21 நிதியாண்டில், ₹178.782 கோடி இந்த முறையில் நன்கொடையாகக் கிடைத்துள்ளது. இது அடையாளம் தெரியாத தரப்பினரிடம் இருந்து ஒட்டுமொத்தமாக அனைத்து தேசியக் கட்சிகளுக்குக் கிடைத்த வருமானத்தில் 41.89% ஆகும். அடுத்ததாக பாஜகவுக்கு ₹100.502 கோடி இந்த முறையில் வருமானம் கிடைத்துள்ளது. இது ஒட்டுமொத்தமாக அனைத்து தேசியக் கட்சிகளுக்குக் கிடைத்த வருமானத்தில் 23.55%, ஆகும்.

பிராந்திய கட்சிகள்

அதேபோல பிராந்திய கட்சிகளைப் பொறுத்தவரை YSR-காங்கிரஸ் கட்சிக்கு ₹96.2507 கோடியும், திமுகவுக்கு ₹80.02 கோடியும், பிஜு ஜனதா தளத்துக்கு ₹67 கோடியும், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவுக்கு ₹5.773 கோடியும் மற்றும் ஆம் ஆத்மிக்கு ₹5.4 கோடியும் இந்த முறையில் வருமானம் கிடைத்துள்ளது.

கூப்பன் விற்பனை

மொத்த ₹690.67 கோடியில் 47.06% தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வருமானமாகக் கிடைத்துள்ளது. அதேபோல 2004-05 மற்றும் 2020-21 நிதியாண்டில் நிதி திரட்டும் கூப்பன் விற்பனை காங்கிரஸ் மற்றும் என்சிபி கட்சிக்கு ₹4,261.83 கோடி வருமானம் கிடைத்துள்ளது. 2020-21 நிதியாண்டுக்கான ஏழு அரசியல் கட்சிகளின் தணிக்கை மற்றும் பங்களிப்பு அறிக்கைகளில் முரண்பாடுகள் உள்ளன.

© Association for Democratic Reforms
Privacy And Terms Of Use
Donation Payment Method