கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் இருக்கும் வேட்பாளர்களில் 391 பேர் தங்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாக தங்களது வேட்புமனுவில் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 12 -ம் தேதி நடைபெறவுள்ளது. அன்று பதிவாகும் வாக்குகள் வரும் 15 -ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும். ஆட்சியைத் தக்க வைக்க காங்கிரஸ் கட்சியும், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற பா.ஜ.க-வும் கடுமையாக முயற்சிக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ளதால் இரு கட்சிகளும் கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு கர்நாடகா தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கர்நாடகா மாநிலத்தில் போட்டியிடும் 2,560 வேட்பாளர்களில் 883 பேர் கோடீஸ்வரர்கள். அதாவது மொத்த வேட்பாளர்களில் 35 சதவிகிதம் பேர் கோடீஸ்வரர்கள். இதில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் 224 வேட்பாளர்களில் 208 பேர் (93%) கோடீஸ்வரர்கள். காங்கிரஸ் கட்சி சார்பாகப் போட்டியிடும் 220 வேட்பாளர்களில் 207 பேர் (94%) கோடீஸ்வரர்கள். அதே போன்று மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி வேட்பாளர்களில் 77 சதவிகிதம் பேரும், ஒன்றுபட்ட ஜனதா தளம் கட்சி வேட்பாளர்களில் 52 சதவிகிதம் பேரும், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களில் 33 சதவிகிதம் பேரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் உள்ளனர். இவர்கள் அனைவரும் தங்கள் வேட்புமனுவில் தங்களின் சொத்துமதிப்பு குறைந்தது 1 கோடிக்கு மேல் உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், பா.ஜ.க வேட்பாளர்களுக்குச் சராசரியாக ரூ 17.88 கோடி சொத்து மதிப்பும், காங்கிரஸ் வேட்பாளர்களுக்குச் சராசரியாக ரூ. 38.75 கோடி சொத்து மதிப்பு உள்ளது. கர்நாடகா மாநிலத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு சுமார் ரூ. 7.54 கோடி.
இதேபோன்று வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் கிரிமினல் வழக்கு தொடர்பாக ஆராய்ந்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்ததாக ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது. களத்தில் இருக்கும் 2,560 வேட்பாளர்களில் 391 பேர் தங்களது வேட்புமனுவில், தங்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதில் முந்துவது பாரதிய ஜனதா கட்சி தான். அக்கட்சி சார்பாக அறிவிக்கப்பட்ட 224 வேட்பாளர்களில் 83 பேர் (37%) தங்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள 220 வேட்பாளர்களில் 59 பேர் (27%) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி வேட்பாளர்களில் 21 சதவிகிதம் பேர் மீதும், ஒன்றுபட்ட ஜனதா தளம் கட்சி வேட்பாளர்களில் 20 சதவிகிதம் பேர் மீதும், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களில் 19 சதவிகிதம் பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன. சுயேச்சை வேட்பாளர்களில் 10 சதவிகிதம் பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது.
கிரிமினல் வழக்கு உள்ள வேட்பாளர்களில், 4 வேட்பாளர்கள் மீது கொலை வழக்கும், 25 வேட்பாளர்கள் மீது கொலை முயற்சி வழக்குகளும் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளனர். மேலும், 23 வேட்பாளர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றவழக்குகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஒரு தொகுதியில் 3 அல்லது அதற்கும் மேல் கிரிமினல் வழக்கு உள்ள வேட்பாளர்கள் களத்தில் இருந்தால் அதனை ரெட் அலார்ட் தொகுதி எனத் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் சுமார் 56 தொகுதிகள் ரெட் அலார்ட் தொகுதியாக அவர்கள் அறிவித்துள்ளனர்.