Skip to main content
Source
Puthiyathalaimurai
https://www.puthiyathalaimurai.com/newsview/153141/Report-says-BJP-Got-72--Of-All-Political-Funds-Via-Electoral-Trusts-In-2021-22
Author
Jnivetha
Date

2021 – 22 நிதியாண்டில் இந்தியாவிலேயே பாஜக-விற்குதான் கார்ப்ரேட் அமைப்புகளிடமிருந்து மிக அதிக நன்கொடை கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms) நடத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ள தகவல்களின்படி அனைத்து கட்சிகளும் பெற்றுள்ள நன்கொடைகளில் 72.17% பாஜக பெற்ற நன்கொடைகள்தான் என்பது தெரியவந்துள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் அறக்கட்டளைகளின் பங்களிப்புகள் பற்றிய வருடாந்திர அறிக்கைகளை, ஒவ்வொரு ஆண்டும் ADR வெளியிடும். `தேர்தல் அறக்கட்டளைகள்’ என்பது, கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் அரசியல் கட்சிகளுக்கு தரும் நன்கொடுகளை அவர்களிடம் கொண்டு சேர்க்கும் மீடியேட்டர் போன்ற ஒரு அமைப்பு. லாப நோக்கற்ற தன்னார்வ அமைப்பாக இந்த தேர்தல் அறக்கட்டளைகள் செயல்படும்.

இப்படி 2021 – 22 நிதியாண்டில் தேர்தல் அறக்கட்டளைகள் வழியாக அரசுக்கு கிடைக்கப்பட்ட நன்கொடைகளில், ரூ.351.50 கோடி (மொத்த நன்கொடையில் 72.17%) பாஜக-விற்கு கிடைத்துள்ளது. காங்கிரஸை பொறுத்தவரை அவர்களுக்கு தெலங்கானா ராஷ்ட்ர சமிதி (பாரதிய ராஷ்ட்ர சமிதி என பெயர் மாற்றப்பட்டது), சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி கட்சி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆகியவற்றையெல்லாம் விட குறைவாகவே நன்கொடை கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

பிற கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்கள்:

- காங்கிரஸ் – ரூ.18.44 கோடி

- தெலங்கானா ராஷ்ட்ர சமிதி – ரூ. 40 கோடி

- ஆம் ஆத்மி கட்சி – ரூ.21.12 கோடி

- YSR காங்கிரஸ் – ரூ. 20 கோடி

- சிரோமணி அகாலி தளம் (Shiromani Akali Dal) - ரூ. 7 கோடி

- பஞ்சாப் லோக் காங்கிரஸ் – ரூ.1 கோடி

- திமுக மற்றும் கோவா ஃபார்வார்ட் கட்சி – ரூ. 50 லட்சம்

இப்படி மொத்தமாக கடந்த நிதியாண்டில் தேர்தல் அறக்கட்டளைகளுக்கு கார்ப்பரேட் மற்றும் தனிநபர்கள் மூலம் ரூ.487.09 கோடிகள் நன்கொடைகளாக கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், அவற்றில் ரூ.487.06 கோடி (99.99 %) பல்வேறு கட்சிகளுக்கு விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த தொகையான ரூ. 487.09 கோடிகளில், ரூ. 475.80 கோடிகளை சுமார் 89 கார்ப்பரேட் / வணிக நிறுவனங்கள்தான் கொடுத்துள்ளன என தேர்தல் அறக்கட்டளைகள் தெரிவித்துள்ளன. மீதமுள்ள தொகை தனிநபர்கள் பலரால் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளவை.


abc