Skip to main content
Source
Tamil.abplive
https://tamil.abplive.com/news/india/bjp-received-over-250-crore-rupees-as-donations-in-2022-23-poll-watchdog-report-159568
Author
குலசேகரன் முனிரத்தினம், குலசேகரன் முனிரத்தினம்
Date

Electon Donation: தேர்தல் நிதியாக 2022-23 காலகட்டத்தில் பாஜக மட்டும் 250 கோடி ரூபாயை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Electon Donation: தேர்தல் நிதியாக 2022-23 காலகட்டத்தில் அரசியல் கட்சிகள் பெற்ற மொத்த தொகையில், 70 சதவிகிதம் பாஜகவிற்கு மட்டும் சென்றுள்ளது.

தேர்தல் நிதி:

2022-23 காலகட்டத்தில் தேர்தல் அறக்கட்டளைகளில் இருந்து அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் தொடர்பான விவரங்களை, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்தல் அறக்கட்டளைகளுக்கு 39 கார்ப்பரேட் மற்றும் வணிக நிறுவனங்கள் சார்பில் 363 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கியுள்ளன. மொத்தமாக, முப்பத்தி நான்கு கார்ப்பரேட் மற்றும் வணிக நிறுவனங்கள் ப்ரூடென்ட் எலெக்டோரல் டிரஸ்டுக்கு 360 கோடி ரூபாயும், சமாஜ் எலெக்டோரல் டிரஸ்டுக்கு ஒரு நிறுவனம் 2 கோடி ரூபாயும், பரிபார்டன் எலெக்டோரல் டிரஸ்டுக்கு இரண்டு நிறுவனங்கள் 75 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், டிரையம்ப் எலெக்டோரல் டிரஸ்டுக்கு இரண்டு நிறுவனங்கள் 50 லட்ச ரூபாயும் நன்கொடையாக அளித்துள்ளன.

கட்சி வாரியான நிதி விவரங்கள்:

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நாடு முழுவதுமுள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த நிதியில், 70 சதவிகிதம் பாஜகவிற்கு மட்டும் சென்றுள்ளது. அதாவது பாஜக 2022-23 காலகட்டத்தில் தேர்தல் நிதியாக 259 கோடியே 8 லட்சத்தை பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சந்திரசேகர ராவ் தலைமயிலான பிஆர்எஸ் கட்சி, மொத்த நிதியில் 24.56 சதவிகிதம் அதாவது 90 கோடி ரூபாயை பெற்றுள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சேர்ந்து மொத்தமாக 17.40 கோடி ரூபாயை மொத்தமாக பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவிற்கு குறைந்த நிதி:

​​ப்ரூடென்ட் எலெக்டோரல் டிரஸ்ட் 2021-22 காலகட்டத்தில் பாஜகவிற்கு ரூ.336.50 கோடி வழங்கிய நிலையில், தற்போது அது 256.25 கோடியாக குறைந்துள்ளது.  அதே சமயம் சமாஜ் இடி அசோசியேஷன் 2022-23ல் தனது மொத்த வருவாயில் ரூ.1.50 கோடியை பாஜகவுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. சமாஜ் எலெக்டோரல் டிரஸ்ட் காங்கிரசுக்கு ரூ. 50 லட்சம் நன்கொடை அளித்துள்ளது.