கடந்த 2021-22ஆம் நிதியாண்டில் பாஜகவுக்கு 614 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக ஏடிஆர் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டில் நாட்டிலேயே நன்கொடை மூலம் மிக அதிக வருமானம் ஈட்டிய கட்சியாக பாஜக உள்ளது. இந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 95.45 கோடி ரூபாய் நன்கொடையாகக் கிடைத்துள்ளது.
2020-21ஆம் நிதியாண்டில் பாஜகவுக்கு 477.545 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தது. அது தற்போது 614.63 கோடியாக அதிகரித்துள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் நன்கொடைகள் குறித்த அறிக்கையை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ADR) ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
நன்கொடை
தனி நபர்கள், வணிக நிறுவனங்கள், தேர்தல் அறக்கட்டளைகள், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கின்றன. அந்தவகையில், தேசிய கட்சிகளுக்கு 20,000 ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்ட நன்கொடை பற்றிய விவரங்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏடிஆர்) வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 2021-2022ஆம் நிதியாண்டில் தேசியக் கட்சிகளுக்கு மொத்தம் 7,141 நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு 780.77 கோடி ரூபாய்.
பாஜகவுக்கு 614 கோடி
2021-22ஆம் நிதியாண்டில் பாஜகவுக்கு மொத்தமாக 4,957 நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நன்கொடை மூலம் 614.626 கோடி ரூபாய் பாஜகவுக்கு கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 1,255 நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு 95.45 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த 2021-22ஆம் நிதியாண்டில் தேசிய கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடை முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 31.50 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் சுமார் 187 கோடி ரூபாய் அதிகமாக தேசியக் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
பாஜக - காங்கிரஸ்
முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் கடந்த 2021-22ம் நிதியாண்டில் பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ள நன்கொடை 28.71 சதவீதம் அதிகரித்துள்ளது. 2020-21ஆம் நிதியாண்டில் பாஜகவுக்கு 477.545 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தது. அது தற்போது 614.63 கோடியாக அதிகரித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு முந்தைய நிதியாண்டை காட்டிலும் கடந்த 2021-22ஆம் நிதியாண்டில் 28 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2020-21ம் நிதியாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு 74.524 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்தது.
பகுஜன் சமாஜ்
முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், சிபிஐ(எம்) நன்கொடைகளில் 22.06 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. தேசியக் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி 2021-2022 நிதியாண்டில் 20,000த்திற்கும் மேல் எந்தவொரு நன்கொடையும் பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 16 ஆண்டுகளாகவே அக்கட்சி ரூ.20,000த்திற்கும் மேல் நன்கொடை பெறவில்லையாம். தேசிய கட்சிகள் டெல்லியில் இருந்து மொத்தம் ரூ.395.85 கோடியும், மகாராஷ்டிராவிலிருந்து ரூ.105.3523 கோடியும், குஜராத்தில் இருந்து ரூ.44.96 கோடியும் பெற்றுள்ளன.
கார்ப்பரேட் நன்கொடை
கார்ப்பரேட்/வணிகத் துறைகள் தேசியக் கட்சிகளுக்கு ரூ. 625.88 கோடி வழங்கியுள்ளன. அதாவது மொத்த நன்கொடையில் 80 சதவீதம் கார்ப்பரேட் மற்றும் வணிக நிறுவனங்கள் வழங்கியவை. தனிநபர்கள் ரூ. 153.33 கோடியை கட்சிகளுக்கு நன்கொடையாக அளித்ததாக ஏடிஆர் தெரிவித்துள்ளது. 2021-22 ஆம் நிதி ஆண்டில், கார்ப்பரேட்/வணிகத் துறைகளில் இருந்து பாஜக ரூ. 548.81 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளது. தனிநபர்கள் ரூ. 65.77 கோடியை பாஜகவுக்கு நன்கொடை அளித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி கார்ப்பரேட்/வணிக நிறுவன நன்கொடையாளர்களிடமிருந்து ரூ.54.57 கோடியும், தனிப்பட்ட நன்கொடையாளர்களிடமிருந்து ரூ.40.89 கோடியும் பெற்றுள்ளதாக ஏடிஆர் தெரிவித்துள்ளது.