2021-22-ஆம் ஆண்டில் பாஜகவுக்கு ரூ.614 கோடி நன்கொடை கிடைத்துள்ளதாக ஜனநாயக சீா்திருத்தங்கள் கூட்டமைப்பு (ஏடிஆா்) தெரிவித்துள்ளது.
அந்தக் கட்சிக்குக் கிடைத்த மொத்த நன்கொடையில் ரூ.548.81 கோடி பெரு நிறுவனங்கள் (காா்ப்பரேட்), வா்த்தகத் துறையினரிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் பெறப்பட்ட நன்கொடை விவரத்தை அரசியல் கட்சிகள் தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பித்துள்ளன. அந்த விவரத்தை ஆய்வு செய்து ஏடிஆா் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 2021-22-ஆம் ஆண்டில் தேசிய கட்சிகளுக்கு ரூ.20,000-க்கும் அதிகமாகக் கிடைத்த மொத்த நன்கொடை ரூ.780.77 கோடி. இதில் ரூ.614 கோடி பாஜகவுக்குக் கிடைத்துள்ளது. காங்கிரஸ் ரூ.95.46 கோடி பெற்றுள்ளது.
பாஜக பெற்ற மொத்த நன்கொடையில் ரூ.548.81 கோடி, காங்கிரஸ் பெற்ற மொத்த நன்கொடையில் ரூ.54.57 கோடி பெரு நிறுவனங்கள், வா்த்தகத் துறையினரால் வழங்கப்பட்டுள்ளது. தங்களுக்கு பெரு நிறுவனங்கள் அளித்ததாக இதர தேசிய கட்சிகள் குறிப்பிட்ட நன்கொடை தொகையைவிட, அந்த நிறுவனங்களிடம் இருந்து பாஜக 7 மடங்கு அதிக நன்கொடை பெற்றுள்ளது.
2021-22-ஆம் ஆண்டில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய மக்கள் கட்சி, திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளுக்குக் கிடைத்த நன்கொடையைவிட பாஜக பெற்ற நன்கொடை மூன்று மடங்கு அதிகம்.
2020-21-ஆம் ஆண்டில் தேசிய கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடையைவிட, 2021-22-ஆம் ஆண்டில் பெறப்பட்ட நன்கொடை 31.5 சதவீதம் (ரூ.187.03 கோடி) அதிகம்.
2020-21-இல் பாஜகவுக்குக் கிடைத்த நன்கொடை ரூ.477.55 கோடி. இது 2021-22-இல் 28.71 சதவீதம் அதிகரித்துள்ளது.
2020-21-இல் காங்கிரஸுக்கு ரூ.74.52 கோடி நன்கொடை கிடைத்தது. இது 2021-22-இல் 28.09 சதவீதம் உயா்ந்துள்ளது.
2020-21-ஐவிட 2021-22-இல் தேசிய மக்கள் கட்சிக்குக் கிடைத்த நன்கொடை 40.5 சதவீதம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு கிடைத்த நன்கொடை 22.06 சதவீதம் குறைந்துள்ளதாக அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.
ரூ.20,000-க்கு அதிகமாக எந்த நன்கொடையும் பெறவில்லை என்று 16 ஆண்டுகளாக பகுஜன் சமாஜ் தெரிவித்து வருகிறது. அதேயே இந்த முறையும் அக்கட்சி தெரிவித்துள்ளது.